Published : 06 Feb 2025 12:49 AM
Last Updated : 06 Feb 2025 12:49 AM
கிருஷ்ணகிரி / சென்னை: பர்கூர் அருகே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த ஒரு மாதமாகப் பள்ளிக்கு வரவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்று விசாரித்தார். அப்போது, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிவம்பட்டி அருகேயுள்ள எம்.பள்ளத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (48), பாரூர் அனுமன்கோவில் பள்ளம் சின்னசாமி (57), எருமாம்பட்டி பிரகாஷ் (37) ஆகியோர் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் கருத்தரித்த மாணவிக்கு, கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில், தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார். அவர்கள் மாணவியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும், மூவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, “வேறு மாணவிகள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை நடத்த வேண்டும். கைதான 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
ஆட்சியர் விளக்கம்: இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் கண்டனம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்றநிலைக்கு தமிழகத்தை தள்ளியதற்காக திமுக அரசு தலைகுனிய வேண்டும். பெண்களுக்குஎதிரான அநீதிகளுக்குப் பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு வலிமையில்லை என அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. குழந்தைகள் நல வாரியத்தை முழுமையாக செயல்பட செய்ய வேண்டும். மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். அனைத்துமாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT