Last Updated : 05 Feb, 2025 06:24 PM

1  

Published : 05 Feb 2025 06:24 PM
Last Updated : 05 Feb 2025 06:24 PM

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், 4 பெண்கள் உள்பட 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 8 அறைகள் இடிந்து தரை மட்டமாகின.

சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் இந்த ஆலையில் பேன்ஸி ரக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். மதிய உணவு இடைவேலையின்போது ஒரு அறையிலிருந்த பட்டாசு மருந்துகள் வேதி மாற்றம் ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. தீப்பொறி அடுத்தடுத்த அறைகளுக்கும் சிதறியால் அடித்தடுத்து இருந்த அறைகளில் உள்ள பட்டாசு வெடி மருந்துகளும் வெடித்துச் சிதறின. உணவு இடைவேளை என்பதால் பட்டாசு அறைகளைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் வெளியே இருந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பியோடினர்.

அடுத்தடுத்து 6 முறை பட்டாசு வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. இதில், 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) 100 சதவீத தீக்காயம் அடைந்தார். மேலும், பொம்மையாபுரத்தைச் சேர்ந்த நாகப்பநாயக்கர் மனைவி முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி மாணிக்கம் (50), அதிவீரம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் மனைவி கஸ்தூரி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், காயமடைந்த அதிவீரம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி வீரலட்சுமி (35) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகிறார். வெடி விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகர், சாத்தூர், சிவகாசியிலிருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுட்டனர். தொடர்ந்து 6 முறை பட்டாசு மருந்துகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்கள், போலீஸார், 108 ஆம்புலன்ஸ் பட்டாசு ஆலைக்குள் உடனடியாக செல்ல முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

அப்போது, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் யார் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அதையடுத்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x