Last Updated : 23 Jul, 2018 07:51 AM

 

Published : 23 Jul 2018 07:51 AM
Last Updated : 23 Jul 2018 07:51 AM

சென்னையில் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து பிஹார் மாநில தொழிலாளி உயிரிழப்பு: விபத்தில் காயமடைந்த 32 பேரில் 3 பேர் கவலைக்கிடம்; 2 பொறியாளர்களை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை

சென்னை கந்தன்சாவடியில் கட்டிடம் கட்டும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பிஹார் தொழிலாளி உயிரிழந்தார். காயமடைந்த 32 பேரில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக 2 பொறியாளர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 9 தளங்களுடன் கூடிய தனியார் மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 4 தளங்கள் முடிவடைந்துள்ள இந்த பணியில் பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தின் அருகில் ஜெனரேட்டர் வைப்பதற்காகவும் மருந்துப் பொருட்களை சேமிக்கவும் பெரிய அளவில் அறை அமைக்கப்படுகிறது. இதற்காக ராட்சத இரும்பு கம்பிகளைக் கொண்டு சாரம் கட்டப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அதிக பாரம் தாங்காமல் ராட்சத இரும்பு கம்பிகள் கான்கிரீட்டுடன் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அருகில் இருந்த விடுதிகளின் பால்கனி, ஆட்டோவை சேதப்படுத்தியபடி விழுந்த இடிபாடுகளில் 30 தொழிலாளர்கள், பால்கனியில் நின்றிருந்த ஒருவர், ஆட்டோவில் செல் போன் பேசியபடி அமர்ந்திருந்தவர் மற்றும் சாலையில் பைக்கில் சென்றவர் என 33 பேர் சிக்கிக்கொண்டனர். சில தொழிலாளர்கள் சாரம் சரிந்து விழு வதைப் பார்த்து தப்பி ஓடினர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் 7 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸார், பேரிடர் மீட்புக் குழு, கமாண்டோ படை, மாநகராட்சி பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி, நவீன கருவி மூலம் இரும்பு கம்பிகளை வெட்டி, சிக்கியிருந்த தொழிலாளிகளை மீட்கும் பணிகளை தொடங்கினர். மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தேவையான உதவிகளைச் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை தீவிரப் படுத்தினர். மீட்கப்படுபவர்களை உடனடி யாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

விடிய விடிய நடந்த மீட்பு பணியில் 32 பேர் மீட்கப்பட்டனர். உயிரிழந்த நிலையில் சடலமாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு (18) என்பவர் மீட்கப்பட்டார். காயமடைந்த 11 பேர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 16 பேர் பெருங்குடி அப்போலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்போலோவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். லேசான காயமடைந்த 5 பேர் முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுச் சென்றனர். உயிரிழந்த பப்லுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தரமணி போலீஸார் விசாரணையைத் தொடங்கி னர். தனியார் கட்டுமான நிறுவனத்தின் மீது, அலட்சியமாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்துதல், விபத்தின் மூலம் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொறியாளர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று இரண்டாவது நாளாக இடிபாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. சுகாதாரத்துறை சார்பில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிட விபத்துக்கு பின்னர் தற்போது கந்தன்சாவடியில் மிகப்பெரிய கட்டிட நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். விபத்து குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி ஆகியோர் உடன் இருந்த னர்.

பின்னர் அவர்கள் அப்போலோ மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்தனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் வலியுறுத்தினர்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “உயிரிழந்த பப்லு உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். பப்லுவின் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை கொடுத்த பின்னர் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலனை செய்வார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 16 தொழிலாளர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறும்போது, “அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மற்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சாதாரண வார்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈஞ்சம்பாக் கம், சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்” என்றார்.

பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு கூறும்போது, “இடிபாடுகளை அகற்றவும் இரும்பு கம்பிகளை வெட்டி எடுக்கவும் கூடுதல் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துப் பணிகளும் முடிவடையும்” என்றார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “இந்த விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 276, 337, 338, 304ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அறிவிப்பு

தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “இடிபாடுகளில் சிக்கியவர்களில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பப்லு குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்தை தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x