

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட (2) இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆட்சியர் பணியில் உள்ளவர்கள், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பார்கள்.
மத்திய மாநில அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதை தலையாய பணியாகக் கருதிச் செயல்படுவது வழக்கம். அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்களின் ஒத்துழைப்புடன், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று எளிதாகச் சேர்த்துவிடலாம். அதேநேரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கிச் செயல்படுத்துவது என்பது சிம்ம சொப்பனமாக இருக்கும். நிலம் கையகப்படுத்துதல் முதல் திறப்பு விழா வரை ‘சவால்கள்’ நிறைந்திருக்கும். எண்ணற்ற சவால்கள் இருந்தாலும், பிரதான சவால்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
சிப்காட் பிரச்சினை... செய்யாறு அடுத்த மேல்மா மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் 3,200 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, சிப்காட் தொடங்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாகக் கூறி வருகிறார். திட்டத்தை எதிர்த்து, 2 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனால் நிலம் கையகப்படுத்து வதில் சிக்கல் தொடர்கிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் புதிய ஆட்சியரின் பங்களிப்புத் தவிர்க்க முடியாது.
திண்டிவனம் - நகரி மற்றும் திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டப் பணிகளுக்கும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதேபோல், போளூர் ரயில்வே மேம்பாலப் பணியிலும் நிலம் கையகப்படுத்து வதில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, மேம்பாலம் கட்டும் பணி முழுமை பெறாமல் 6 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதிலும் ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.
புறவழிச்சாலை... தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் புறவழிச்சாலை முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை மாநகரில் சுற்று வட்டப் பாதையில் 50 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 50 சதவீத பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து இழுபறி நிலையை எதிர்கொண்டுள்ளது.
செங்கத்தில் புறவழிச்சாலை அமைக்க, நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேட்டவலம் பேரூராட்சியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், அறிவிப்புடன் திட்டம் ஸ்தம்பித்துவிட்டது. புதிய ஆட்சியரின் பங்களிப்பானது, புறவழிச் சாலைக்கும் தேவைப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையில் கடந்தாண்டு டிச.1-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, மண்ணில் புதைந்து 7 பேர் உயிரிழந்தனர். 20 வீடுகள் சேதமடைந்தது.
ஏற்கெனவே, மலையே மகேசன் எனப் போற்றி வணங்கப்படும் மகா தீப மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடரப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதால், இப்பிரச்சினை சூடுபிடித்துள்ளது. மலையில் வசிப்பவர்களின் கணக்கெடுப்பு பணியில் வருவாய்த் துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையில் வசிப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பிரச்சினையை எவ்வாறு சமாளித்து ஆட்சியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் புதிய ஆட்சியர் செயல்படப் போகிறார் என் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் இருப்பதால், திருவண்ணாமலை மாநகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது. இதற்குத் தீர்வு காண மாட வீதியில் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பில், திடீரென பின்வாங்கப்பட்டு, பேருந்து போக்குவரத்துக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. திருவண்ணாமலை மாநகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண, பிரத்தியேக திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம், புதிய ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய பூமி என்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் மிகக் குறைவு. சிப்காட் தொடங்க, நிலம் கையகப்படுத்தும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனை மனதில் கொண்டுள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அரசு விழாவில், மேல் செங்கத்தில் பயன்பாடு இல்லாமல் உள்ள மத்திய அரசின் 10 ஆயிரம் ஏக்கர் விதைப் பண்ணையைக் கையகப்படுத்தி மாவட்ட நிர்வாகம் அளித்தால், விமான நிலையம் மற்றும் சிப்காட் தொடங்குவேன் எனச் சூளுரைத்தார். மேல்செங்கத்தில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆட்சியரின் அசைவு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மணல் கொள்ளை: ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகி திருவண்ணாமலை மாவட்டம் வழியாகக் கடந்து செல்லும் செய்யாறு மற்றும் கமண்டல நாகநதியில் மணல் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. ஏரிகளிலும் மண் கொள்ளை தொடர்கிறது. கனிம வளக் கொள்ளையால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, கொள்ளையர்கள் மீது தயவு தாட்சியமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஆட்சியருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் ரயில்களில் கொண்டு வரப்படும் கஞ்சா கடத்தலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
புதிய பேருந்து நிலையம்: திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம், கடந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக பயன்பாட்டு வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மாதம் கடந்துவிட்டது. ஆரணி, போளூரில் புதிய பேருந்து நிலையம் தேவைப்படுகிறது. சேத்துப்பட்டு, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் இருந்தாலும், பேருந்துகள் உள்ளே சென்று வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், மருத்துவர் பணியிட பற்றாக்குறையைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
இவர்களுக்குப் பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பல்வேறு காரணங்களைக் கூறி, கோட்டாட்சியர்கள் மறுக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தகுதியானவர்களுக்குப் பழங்குடியின சாதிச் சான்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் புதிய ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ளது.