

விளைநிலப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் மின்வாரியம், மின்மாற்றி பழுதானால் பழுதை சரிசெய்யும் செலவினத்தை தங்களையே ஏற்க வைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி கிணற்றுப் பாசன விவசாய நிலங்களுக்கு மும்முனை இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க ஏதுவாக குறிப்பிட்ட தொலைவுக்கு ஏற்பவும், மின் பயன்பாட்டுக் கணக்கின் அடிப்படையிலும் மின்மாற்றி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கும் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் அந்தப் பழுதை அப்பகுதியின் வயர்மென் சரிசெய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்மாற்றி ஒன்று பழுதான நிலையில், அந்தப் பழுதை நீக்க, வயர்மென் மற்றும் நில உரிமையாளர் ஆகியோர் வாடகை வாகனத்தில் மின்மாற்றியை ஏற்றிக்கொண்டு மணலூர்பேட்டையில் உள்ள மின் உபகரணங்கள் பழுது நீக்கும் கடைக்கு கொண்டு சென்றனர். அப்போது நில உரிமையாளரே வாடகை வாகனத்தை அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மணி கூறுகையில், “பொதுவாக பெரிய அளவிலான பழுது ஏற்பட்டால், உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஆய்வுசெய்து சரிசெய்ய வேண்டும். சிறிய அளவிலான பழுது என்றால் இளநிலைப் பொறியாளர் பொறுப்பில் சரி செய்ய வேண்டும்.
விவசாயிகளிடம் எவ்வித செலவுத் தொகையும் பெறக்கூடாது. ஆனால் நடைமுறையில் நேர்மாறாக உள்ளது. எங்களைப் போன்ற விவசாய சங்கத்தினர் தலையிட்டால், சரிசெய்ய காலதாமதம் ஏற்படுத்தி அலைக்கழித்து, பின்னர் செய்து கொடுப்பார்கள். விவசாயிகளின் அவசரத் தேவை, மின்வாரிய ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்து விடுவதால், அதைப்பயன்படுத்தி அனைத்து செலவினத்தையும் விவசாயிகள் தலையில் சுமக்க வைக்கின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தாலும் பெயரளவுக்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
இதையடுத்து திருக்கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தங்கத்திடம் கேட்டபோது, “சிறிய அளவிலான பழுது ஏற்பட்டால் அதற்கான செலவினத்தை வயர்மென் பார்த்துக் கொள்வார். அதன் பின் மின்வாரியத்துக்கு ரசீது சமர்ப்பித்து செலவினத் தொகையை பெற்றுக் கொடுப்போம்” என்றார். மின்வாரியத்தினர் இவ்வாறு விளக்கம் அளித்தாலும், இப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டு மேலே குறிப்பிட்டவாறே இருக்கிறது.