Published : 05 Feb 2025 12:18 PM
Last Updated : 05 Feb 2025 12:18 PM
சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்.5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: “தயவுசெய்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். முழுக்க முழுக்க அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களைப் பொருத்தவரை பாஜக-வினர் தான் என்று நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
அவர்கள் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்று நடத்தப்பட்ட போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். பல்வேறு ஊடகங்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அந்த ஊடகங்கள், அப்பகுதியில் வசிக்கின்ற மக்களின் பேட்டிகளை எடுத்திருந்தனர்.
அதில் பேசிய இஸ்லாமிய, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. தேவையில்லாமல், இந்த பகுதிக்கு வரும் வெளியூரில் இருந்து வருபவர்கள்தான், இப்பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். எனவே, இது தேவையற்ற பிரச்சினை என்று அப்பகுதி மக்களே கூறியிருக்கின்றனர். எனவே, தான் நாங்களும் இது தேவையற்ற பிரச்சினை என்று கருதுகிறோம். திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக்கூட்டி, மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்ற பிரச்சினையை பிரிவினையை ஏற்படுத்த நினைத்தார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் அமையக்கூடும்.
எச்.ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு சொல்லிக்கொள்கிறேன். முதல்வர் எங்களை அடக்கிவாசிக்க சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் வடமாநிலத்தைப் போல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் உறுதிமிக்கவர். எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். இந்த மண்ணில், பெரியார், திராவிட மண்ணில், திராவிட மாடல் ஆட்சியில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்க ஒருகாலமும் அனுமதிக்கமாட்டார்.
திருப்பரங்குன்றம் மலையைப் பொருத்தவரையில், 1920-ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. பின்னர், லண்டன் பிரிவியூ கவுன்சில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து 1958, 1975, 2004, 2017 மற்றும் 2021 என்று பல நேரத்தில் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. தற்போதுகூட, இந்த விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் 7 வழக்குகளில் எதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவு வழங்கியதோ, அந்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசு அதை மதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இந்த பிரச்சினையை வைத்து அரசியல் குளிர்காயலாம் என்று நினைக்கிறார்கள். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் இந்த அரசு செயல்படும். விரைவில் முதல்வரின் அனுமதியோடு துறையின் அமைச்சர் என்ற முறையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருக்கிறேன். கோயிலைப் பொருத்தவரை, 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கில் வரும் தீர்ப்பின் அடிப்படையில், இந்த அரசு அந்த தீர்ப்பின் உத்தரவை மேற்கொள்ளும்.
கோயில் நிர்வாகத்தைப் பொருத்தவரையில், தர்கா தரப்பினருக்கும், வழிபாட்டு முறைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவே பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை அந்நியப்படுத்தி பாஜக தேர்தல் ஆதாயம் அடையலாம் என்று நினைக்கிறார்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட, ஒரு மதத்துக்கு எதிரான கோஷங்களைத்தான் எழுப்பினார்கள். மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்தி பேசினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில், ஏற்கெனவே என்ன மாதிரியான வழிபாட்டு வழிமுறைகளை பின்பற்றினார்களோ, அதுவே தொடரும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT