ராமாபுரத்தில் பரபரப்பு சாலையில் கிடந்த ஏ.கே.47 துப்பாக்கி குண்டுகள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: 30 தோட்டாக்களுடன் சாலையில் கிடந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மெகஸினால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், சம்பந்தப்பட்ட தோட்டாக்கள் ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரருடையது என தெரியவந்தது.

சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம், எம்இஎஸ் சாலை, மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ் (34). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, சென்னை நந்தம்பாக்கம், மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ராமாபுரம் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கே சாலையில் ஏ.கே. 47 ரக (AK 47) துப்பாக்கி மெகஸின் (துப்பாக்கியில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி) ஒன்று, 30 தோட்டாக்களுடன் கிடந்தது. அவர் அதை எடுத்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் சம்பந்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களை பெற்று விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சாலையில் கிடந்த துப்பாக்கி மேகஸின் ரவுடி கும்பலுக்காக கடத்தி கொண்டுவரப்பட்டதா? அல்லது பாதுகாப்புத் துறையினருடையதா? என விசாரணை நடத்தப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட துப்பாக்கி மேகஸின் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரரான (சிஆர்பிஎப்) அன்னப்பு லட்சுமிரெட்டி என்பவரால் தொலைக்கப்பட்டது எனத் தெரியவந்தது.

77-வது அணியைச் சேர்ந்த அன்னப்பு லட்சுமிரெட்டி கரையான்சாவடியிலுள்ள அவரது சிஆர்பிஎப் முகாமிலிருந்து வாகனத்தில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) பாதுகாப்புப் பணிக்காக சென்று கொண்டிருந்தபோது, அவருடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய மெகஸின் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து, அந்த துப்பாக்கி மேகஸின் சிஆர்பிஎப் வீரர் அன்னப்பு லட்சுமிரெட்டியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in