Published : 05 Feb 2025 06:07 AM
Last Updated : 05 Feb 2025 06:07 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது.
இதனால், லண்டனிலிருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மஸ்கட்டிலிருந்து 252 பயணிகளுடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை பெங்களூருவுக்கும் மற்றும் ஐதராபாத்திலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், புனேவிலிருந்து 152 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை திருவனந்தபுரத்துக்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
குவைத்திலிருந்து 148 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உட்பட சில விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன.
அதேபோல், சென்னையிலிருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. வானிலை சீரானதும் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானங்கள் மற்றும் மற்ற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.
பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 5.30 மணியிலிருந்து காலை 9 மணி வரை 40-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்கள், 2 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் வரை தாமதமாகியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெடிகுண்டு மிரட்டல்: இதற்கிடையே ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகரிலிருந்து சென்னைக்கு 174 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த லுப்தான்ஸா ஏர் லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான நிலையத்துக்கு இமெயில் ஒன்று வந்தது. இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படை வீரர்கள், விமான பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
நள்ளிரவு 12.16 மணிக்கு விமானம் தரையிறங்கியதும், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமானத்தை முழுமையாக சோதனை நடத்தினர். குண்டுகள் எதுவும் கிடைக்காததால், இது வழக்கமான புரளிஎன தெரியவந்தது. வெடிகுண்டு சோதனை காரணமாக அதிகாலை 2 மணிக்கு மீண்டும் ஜெர்மன் புறப்பட வேண்டி விமானம் அதிகாலை 4 மணிக்கு 265 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT