Published : 05 Feb 2025 12:36 AM
Last Updated : 05 Feb 2025 12:36 AM
சேலம்: திமுகவில் இன்பநிதிக்காவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் கட்சியிலிருந்து விலகினேன் என்று திமுக நிர்வாகி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழில்அரசன் (35). திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் எழில் அரசன் கூறியது: 2015-ம் ஆண்டில் இருந்து கட்சியில் உள்ளேன். அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்தேன். கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு பலமுறை திமுக நிர்வாகிகளிடம் வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியிலிருந்து என்னை நீக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் கூட, எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்கவும் இல்லை.
மூத்த தலைவர்கள்... துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உள்ள நிலையில், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி திடீரென இளைஞரணிச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் என குறுகிய காலத்துக்குள் உயர்ந்த பொறுப்புக்கு வந்துவிட்டார். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. தற்போது இன்பநிதிக்கு வெளிப்படையாக கொடுக்கும் முக்கியத்துவம், என்னைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரையில் ஜல்லிகட்டுப் போட்டியின்போது, ஆட்சியரை அலட்சியப்படுத்தியதைக் கண்டு வருந்தினேன். வருங்காலத்தில் இன்பநிதிக்காகவும் பணியாற்ற வேண்டியிருக்கும்என்று கருதும்போது வேதனை ஏற்படுகிறது.
எனவேதான், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளேன். பலரும் அடுத்தடுத்து விலகுவார்கள். குறிப்பாக, கிராமங்களில்இருந்து பலர் விலகுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT