Last Updated : 04 Feb, 2025 08:20 PM

 

Published : 04 Feb 2025 08:20 PM
Last Updated : 04 Feb 2025 08:20 PM

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் - தமிழக விவசாயிகள் கண்டனம்

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி கேரள மாநிலம் குமுளியில் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஊர்வலம்.

குமுளி: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும் 8-ம் தேதி குமுளியில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்த நிலையில் 1979-ம் ஆண்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கேரளாவில் வதந்தி பரவியது. அதனைத் தொடர்ந்து அணையின் உச்ச அளவு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை இரு மாநிலங்களிலும் அணை குறித்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய், 130 ஆண்டுகளுக்கு மேலாகியும் அணை பலமாகவே உள்ளது. அணை உடையும் என்பது கற்பனை கதை போலவே உள்ளது என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், கேரள தரப்பில் இக்கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி குமுளியில் போராட்டம் நடத்துவதாக அங்குள்ள அமைப்புகள் தெரிவித்தன. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குமுளி என்பது இரு மாநில எல்லை.

சோதனைச்சாவடியில் இருந்து மிக அருகிலேயே இப்பகுதிகள் அமைந்துள்ளன. ஆகவே போராட்டங்கள் இங்கு நடைபெற அனுமதிப்பதில்லை. தமிழகத்தைப் பொறுத்தளவில் குமுளியில் 6 கிமீ தூரத்தில் உள்ள லோயர்கேம்ப்பிலும், அதே போல் கேரளாவில் குமுளியில் இருந்து 12 கிமீ தூரத்தில் உள்ள வண்டிப்பெரியாறிலும்தான் போராட்டம் நடத்த அனுமதி தருவது வழக்கம்.

இந்நிலையில், கேரளத்தில் உள்ள ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழு சார்பாக குமுளி - மூணாறு சாலையின் ஒன்றாம் மைல் எனும் இடத்தில் இருந்து நேற்று ஊர்வலம் தொடங்கியது. அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் குமுளி பேருந்து நிலையம் நோக்கிச் சென்றனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஊர்வலத்துக்கு ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு தலைவர் கே.எம்.சுபையர் தலைமை வகிக்க, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ ஸ்டீபன் முன்னிலை வகித்தார். காந்திபோல வேடமணிந்த ஒருவர் ராட்டையுடன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

வரும் வழியிலே குமுளி போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு தலைவர் சுபையரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து பிரிந்து சென்றனர்.

இந்நிலையில், குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தியது குறித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி வரும் 8-ம் தேதி நாங்களும் குமுளியின் தமிழகப் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x