Published : 04 Feb 2025 08:11 PM
Last Updated : 04 Feb 2025 08:11 PM
மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளையும், கெடுபிடிகளையும் மீறி அலகுகள் குத்தியும், காவடி எடுத்தும், காவி வேட்டி கட்டியும் பக்தர்கள் போன்று இந்து முன்னணி, பாஜகவினர் கோயிலுக்குள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போலீஸார் கண்காணிப்பில் கோட்டைவிட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் கோயில் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து பிப்.3, 4-ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதனால், திருப்பரங்குன்றத்துக்கு உள்ளூரில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் இந்து அமைப்பினர், பாஜகவினர் வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளின் அனைத்துச் சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், அனிதா, வனிதா, ராஜேஸ்வரி, வெளிமாவட்ட எஸ்பிக்கள் மயில்வாகனன், தங்கத்துரை உள்ளிட்ட 5 எஸ்பிகேகள் மற்றும் 2300-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் தவிர உளவுத்துறை போலீஸாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு போட்டு இந்து அமைப்பினர், பாஜகவினர் கோயிலுக்குள் செல்லாதவாறு கெடுபிடியாகச் சோதனையிட்டனர்.
திருப்பரங்குன்றத்துக்கு வெளியூரிலிருந்து வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. பேருந்துகளில் இறங்கி வந்த சாதாரண பொதுமக்களைக்கூட போலீஸார் சோதனை செய்தே அனுமதித்தனர். அதேபோல், உள்ளூர்க்காரர்கள் அப்பகுதியிலிருந்து வெளியில் செல்லவும், வெளியிலிருந்து உள்ளே வரவும் போலீஸார் ஏகப்பட்ட கெடுபிடிகள் காட்டினர். இதனால், போலீஸார் உடன் உள்ளூர் மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தன.
திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினையில் போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர், எந்த வகையிலாவது போலீஸாரின் கெடுபிடிகளை மீறி கோயிலுக்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய மாவட்ட வாரியாக பல்வேறு வடிவங்களில் செல்வது என முடிவெடுத்தனர்.
தெப்பத் திருவிழா நடப்பதால் முருகனுக்கு காவடிகள் எடுத்தும், உடலில் அலகுகள் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வருகின்றனர். இதைப் பயன்படுத்தி இந்து அமைப்பினர் ஒரு தரப்பினர் பக்தர்கள் போல வேடமணிந்து போலீஸாரை ஏமாற்றி திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்துக்குள் நுழைந்தனர். பெண் பக்தர்கள் போல் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஆண் பக்தர்கள் போல் காவி உடை அணிந்தும் போலீஸாருக்கு சந்தேகம் வராத வகையில் இந்து முன்னணி, பாஜகவினர் கோயிலுக்குள் சென்றனர்.
போலீஸார் யாரும் கோயில் வளாகத்தில் நுழையவில்லை என்று நினைத்திருந்த நிலையில் அவர்களை ஏமாற்றி உள்ளே சென்றிருந்த இந்து அமைப்பினர் அன்னதானக் கூடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாஜக கொடியைக் காட்டியும் முழக்கங்களை எழுப்பினர். கொடி வைத்திருந்ததைக்கூட சோதனை செய்யாமல் போலீஸார் எப்படி அனுமதித்தனர் எனத் தெரியவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி பல்வேறு வடிவங்களில் கோயில் வளாகத்தில் நுழைந்து, ‘‘முருகன் மலை எங்கள் மலை, வெற்றிவேல் வீரவேல், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’’ என முழக்கங்கள் எழுப்பியது போலீஸாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடக்கம் முதல் தற்போது வரை உளவுத்துறை போலீஸார், மாநகர போலீஸாரின் கண்காணிப்பு, பாதுகாப்பில் கோட்டை விட்டதே, இந்த பிரச்சினை சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றது. இனியாவது இதுபோன்ற விவகாரங்களில் தொடக்கிலேயே கிள்ளி எறிய தேவையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். | வாசிக்க > “திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்...” - பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு
- ஒய்.ஆண்டனி செல்வராஜ், சுப.ஜனநாயக செல்வம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT