Published : 04 Feb 2025 06:02 PM
Last Updated : 04 Feb 2025 06:02 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நான்கு வட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆதியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை உடன்குடி பஜார் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழக அரசை கண்டித்தும் இத்திட்டத்தினை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பெண்கள் உள்ளிட்ட 200 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் உடன்குடி பஜாரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT