Published : 04 Feb 2025 12:51 PM
Last Updated : 04 Feb 2025 12:51 PM

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்க: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின் போது 56 முதன்மைக் கேள்விகள் உள்ளிட்ட மொத்தம் 75 வினாக்கள் கேட்கப்பட்டு பொதுமக்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்ட அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் அறிக்கையையும், பரிந்துரைகளையும் அம்மாநில அரசிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்திருக்கிறது.

ஐதராபாத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தெலங்கானா சட்டப் பேரவையின் நான்கு நாள் சிறப்புக் கூட்டத் தொடரும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமூகநீதியைக் காக்க தெலங்கானா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் புரட்சிகரமானவை. இதன் மூலம் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்ட இரண்டாவது மாநிலம் என்ற பெருமையை பிகாருக்கு அடுத்தபடியாக தெலங்கானா பெற்றிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியதுடன், தெலங்கானா அரசு அதன் கடமையை முடித்துக் கொள்ளப் போவதில்லை. பிஹார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அம்மாநில அரசு தீர்மானித்திருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் இப்போது சாதிகளின் அடிப்படையில் 50% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதில் பட்டியலினத்தவருக்கு 15% பழங்குடியினருக்கு 6% போக மீதமுள்ள 29% பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு 4% ஒதுக்கீடு உள்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மொத்தம் 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின்படி, தெலங்கானாவில் 10.08% இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை 56.33% என்று தெரியவந்துள்ளது. பட்டியலினத்தவரின் மக்கள்தொகை 17.43%, பழங்குடியினரின் மக்கள்தொகை 10.45%, 2.48% இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற வகுப்பினரின் மக்கள்தொகை 15.79% என்றும் சாதிவாரி மக்கள்தொகை மூலம் தெரியவந்திருப்பதாக தெலங்கானா அரசு கூறியுள்ளது.

தெலங்கானாவில் பிற வகுப்பினரின் மக்கள்தொகையில், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களின் எண்ணிக்கை 12%க்கும் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், அவர்களுக்கு அங்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் 56.33% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு 29% இட ஒதுக்கீடு மட்டும் தான் வழங்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 10.08% என்ற நிலையில், அவர்களுக்கு 4% மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது நியாயமல்ல. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகையை விட குறைவாகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை மாற்றியமைக்க தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. அது மிகவும் சரியானதே.

சமூகநீதி சார்ந்த இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தெலங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவோ, அதன் விவரங்களை வெளியிடவோ அம்மாநில உயர்நீதிமன்றம் எந்தத் தடையையும் விதிக்கவில்லை.

அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதற்கான புள்ளிவிவரங்களையும் பகுப்பாய்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தால் அதையும் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும் என்பது எதார்த்தம்.

சமூகநீதியை நிலைநாட்டுவதை நோக்கி தெலங்கானா அரசு இந்த அளவுக்கு பயணம் செய்திருக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் தமிழக ஆட்சியாளர்களோ, இந்தப் பயணத்தில் இன்னும் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கோ, உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் விகிதத்தை மாற்றி அமைக்கவோ எந்தத் தடையும் இல்லை. ஆனால், மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாது என்ற ஒரே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி சமூகநீதிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தமிழக அரசு. இதன் மூலம் முதல்வரின் போலி சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல. தெலங்கானா மாநில அரசு வெறும் ரூ.150 கோடியில், 1.03 லட்சம் கணக்கெடுப்பாளர்களையும், 10 ஆயிரம் மேற்பார்வையாளர்களையும் கொண்டு 50 நாட்களில் நடத்தி முடித்திருக்கிறது. இதே காலத்தில் ரூ.300 கோடியில் இதை தமிழகத்தாலும் சாதிக்க முடியும்.

சமூகநீதி வார்த்தைகளில் வாழ்வதில்லை; செயல்பாடுகளில் தான் தழைக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தங்கள் உறக்கத்தைக் கலைத்து விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x