

விருதுநகர்: விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் பாஜக, இந்து முன்னணி அமைப்பினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய பேருந்து மற்றும் ரயில்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுமதியை மீறி திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் இந்து முன்னணி அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்படும் வீட்டு காவலில் அடைக்கப்படும் வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் சூலக்கரையில் உள்ள பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கனை போலீஸார் வீட்டுக்காவலில் அடைத்துள்ளனர். தொடர்ந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்க விருதுநகர் வழியாக மதுரை நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகள், கார்கள், வேன்களை நிறுத்தி போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து மதுரை நோக்கி செல்லும் நாகர்கோயில்- மும்பை விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில் போன்ற ரயில்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வந்த ஆர்எஸ்எஸ் தமிழ்நாடு, கேரளா மாநில பொறுப்பாளர் வன்னிய ராஜனை போலீஸார் சுற்றிவளைத்தனர். அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தான் தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வன்னிய ராஜன் ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். போலீஸார் அவரது வீட்டுக்கு பின் தொடர்ந்து சென்றனர். மேலும் விருதுநகரில் உள்ள பாஜக, இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.