Published : 04 Feb 2025 12:09 PM
Last Updated : 04 Feb 2025 12:09 PM
சென்னை: “திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல பாஜகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது சமூகவலைதளப் பக்கத்தில், “திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை தொடர்பான நிகழ்வுகளில், இந்து மத விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைக் கண்டித்தும், பாரபட்சமாகச் செயல்படும் திமுக அரசைக் கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தைக் காக்க இன்று நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க, மதுரை மாவட்டம் முழுவதும் திமுக அரசு 144 தடைவிதித்துள்ளது.
ஆனால், தமிழகம் முழுவதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல, பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன், கோயம்புத்தூர் நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் டிவி சசிக்குமார், மற்றும் பாஜகவினர் பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசு.
அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு. திமுக அமைச்சருக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட தமிழக மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் துணை செல்வதை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்
பிரச்சினையின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 4-ல் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி பிப். 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி தெரிவித்திருந்தது.
ஆனால் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மலையைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதுமே இந்து அமைப்பினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT