ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்புக்கு இதய பிரச்சினையே காரணம்: எழும்​பூர் அரசு குழந்தைகள் நல மருத்​துவ​மனை விளக்கம்

ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்புக்கு இதய பிரச்சினையே காரணம்: எழும்​பூர் அரசு குழந்தைகள் நல மருத்​துவ​மனை விளக்கம்
Updated on
1 min read

சென்னை: ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். சிறுவனுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததால், அது தான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் 9 வயது மகன் மைதீஸ்வரன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு ஜிபிஎஸ் நோய் இருப்பது தெரியவந்தது. சிறுவனுக்கு இம்யூனோகுளோபளின் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: கில்லன் பாரே சின்ட்ரோம் என்பது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் ஒரு வகையான பாதிப்பு ஆகும். தரமற்ற உணவு, நீர் மாசுபாடு, நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை பாதிப்பு, மருந்து எதிர்வினை, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்பட பல்வேறு காரணங்களால் அப்பிரச்சினை ஏற்படலாம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அதன் முதல்கட்ட அறிகுறிகளாக உள்ளன. தொடர்ந்து அந்த கிருமிகள், உடலின் எதிர்ப்பாற்றலுக்கு எதிராக செயல்பட்டு தன்னுடல் தாக்கு நோயாக உருமாறி நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அதன் விளைவாக மூட்டு வலி, முதுகு வலி, கைகால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணர்தல், மூச்சு விடுதலில் சிரமம், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஏற்படலாம்.

இதுபோன்ற அறிகுறிகளுடன் ஓரிரு குழந்தைகள் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நோயை கண்டு பயப்பட வேண்டாம். கரோனா போல், இது தொற்றி கொள்ளும் நோய் பாதிப்பு இல்லை. சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் குணமடைந்து விடுகின்றனர். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் ஓரிருவர் உயிரிழக்க நேரிடுகிறது.

அந்த வகையில், மைதீஸ்வரனுக்கு இம்யூனோகுளோபலின் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ஜிபிஎஸ் நோயின் தீவிரத்துடன் இதய பிரச்சினையும் இருந்ததால் சிறுவன் உயிரிழந்துள்ளான். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜிபிஎஸ் நோய் தொற்று பரவியுள்ளது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ ஜிபிஎஸ் நோய் தொற்று புதியது இல்லை. ஏற்கெனவே இருக்கும் தொற்று தான். இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை. உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in