Published : 04 Feb 2025 08:29 AM
Last Updated : 04 Feb 2025 08:29 AM
கடந்த 4 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. கடந்த முறை திருவிழா கோலத்தில் இருந்த இத்தொகுதி, இம்முறை பலமான போட்டியாளர்கள் இல்லாததால் களையிழந்து கிடக்கிறது. இருந்த போதும் ஆளும் கட்சிக்கே உரித்தான பதைபதைப்புடன் வீடுவீடாக வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார். வாக்குச் சேகரிப்புக்கு நடுவே ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த மினி பேட்டி இது.
இது நீங்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி. இப்போது களம் எப்படி உள்ளது?
தமிழக சட்டசபை வரலாற்றில் இரண்டே கால் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரே எம்எல்ஏ நானாகத்தான் இருப்பேன். உச்ச நீதிமன்றம் வரை சென்று என் உரிமையை நிரூபித்து எம்எல்ஏ-வாக பணியை நிறைவு செய்தேன். கடந்த 14 நாட்களில் 33 வார்டுகளில் 150 கிலோமீட்டர் தூரம், நானும், அமைச்சர் முத்துசாமியும் நடந்து சென்று ஒன்றரை லட்சம் மக்களைச் சந்தித்துள்ளோம். செல்லுமிடமெல்லாம், நான் செய்த பணிகளை மக்கள் நினைவுகூர்ந்து வரவேற்கின்றனர். சில குறைகளையும் மக்கள் உரிமையோடு சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் அவற்றை தீர்ப்பதாகச் சொல்லி இருக்கிறோம்.
நாதக வேட்பாளரோடு போட்டியிடுவது, காலக்கொடுமை என்று விமர்சனம் செய்துள்ளீர்களே..?
பொய்யும் புரட்டும் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிற ஒருவரை, தலைவராகக் கொண்ட கட்சியை எதிர்த்துப் போட்டியிட வேண்டியுள்ளதே என்று தான் அப்படிச் சொன்னேன். நாதக வேட்பாளரை மனதில் வைத்துச் சொல்லவில்லை.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததன் மூலம், நாதக-வுக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாக நினைக்கிறீர்களா?
தங்களது பலம், பலவீனத்தை கருத்தில் கொண்டு அவர்கள் தேர்தலை புறக்கணித்திருக்கலாம். ஆனால், தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், மறைமுகமாக நாதக-வுக்கு உதவுவதாக சொல்கிறார்கள். நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நான் தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறேன்.
கடந்த முறை அமைச்சர்கள் படையே களத்தில் இருந்தது. இப்போது உள்ளூர் அமைச்சரைத் தவிர யாருமே வரவில்லையே..?
கடந்தமுறை வாக்காளர்கள் தன்னெழுச்சியாக எங்களோடு இருந்ததை தவறாக விமர்சனம் செய்தனர். அதனால், இம்முறை எவ்வித குற்றச்சாட்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் மட்டும் இடைத்தேர்தல் பணியை மேற்கொள்ளுமாறு கட்சித்தலைமை கூறிவிட்டது.
விஜயகாந்த்துக்கு துரோகம் செய்துவிட்டதாக உங்கள் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறதே?
நான் தேமுதிக-வில் இருந்து வெளியேறி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இதைப் பற்றி யாரும் என்னிடம் பேசுவதில்லை; கேட்கவும் இல்லை. எதிர்க்கட்சியினர் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். சொல்லப் போனால், நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில், எங்களையும் திமுக-வுக்கு அழைத்துச் சென்றிருக்கலாமே என்று தேமுதிக-வினர் உரிமையோடு கேட்டனர்.
சீமானின் பெரியார் எதிர்ப்பு விமர்சனம் ஈரோடு கிழக்கில் எதிரொலிக்கிறதா?
பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு நாடு முழுவதும் ஏற்றுக்கொண்ட மிகப்பெரிய தலைவர் பெரியார். அப்படிப்பட்டவரை விமர்சிப்பது கீழ்த்தரமான செயல். இடைத்தேர்தல் களத்தில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சீமான் இந்த விமர்சனத்தைச் செய்கிறார். தேர்தல் முடியும் வரை அவருக்கு எந்தப் பதிலையும் நாங்கள் சொல்ல விரும்பவில்லை.
இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டும் திமுக-வின் வேட்பாளர் இந்தியில் துண்டுப் பிரசுரம் அடித்து வாக்குச் சேகரிக்கலாமா?
ஈரோட்டில் வசிக்கும் வடமாநிலத்தவர்களில் பலர் திமுக-வில் இணைந்து பணியாற்றுபவர்கள். அவர்களில், புகழ்பெற்ற ஜவுளி வியாபாரியான கோத்தாரி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அவர்களது பகுதியில் உள்ளவர்களிடம் எனக்கு வாக்குச் சேகரிக்க இந்த துண்டுப் பிரசுரத்தை அடித்து விநியோகித்துள்ளார். இந்தி பேசாதவர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதைத்தான் திமுக எதிர்க்கிறது. சம்பந்தமில்லாமல் இந்த துண்டுப் பிரசுரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே என்கிறாரே சீமான்?
அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு வராத போதே இது போன்ற பொய் விமர்சனங்களை வைக்கின்றனர். எந்த இடத்தில் பணம் கொடுத்தார்கள் என்று அவர் நிரூபிக்கட்டும்.
2026-ல் மீண்டும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?
எங்கள் தலைவரும், கட்சித்தலைமையும் அதனை முடிவு செய்வார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT