Published : 04 Feb 2025 02:15 AM
Last Updated : 04 Feb 2025 02:15 AM
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலக அளவில் மிக ஆபத்தான உடல்நல பிரச்சினைகளில் ஒன்று புற்றுநோய். இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்புடன் 14.61 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் கூறுகிறது. கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் இந்த பாதிப்பு 12.8 சதவீதம் அதிகரித்து வருகிறது.
எனினும், உலகளாவிய மரபணு ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. நம் நாட்டில் புற்றுநோய்க்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிவதற்கான சாதனங்களோ, மருந்துகளை பட்டியலிடப்படவில்லை.
இந்த இடைவெளியை போக்கும் வகையில், புற்றுநோய் மரபணு திட்டத்தை சென்னை ஐஐடி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பக புற்றுநோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கப்பட்டது. மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய மார்பக புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் சுருக்கமும் சேகரிக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நேற்று வெளியிட்டார். புற்றுநோய்களுக்கான மரபணு வரைபடங்களை bcga.iitm.ac.in என்ற தளத்தில் பார்க்கலாம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இந்த தளத்தை எளிதில் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய் மரபணு வரைபடம் தயாரிப்பு குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி, ஐஐடி புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான உயர் சிறப்பு மையத்தின் தலைவர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் கூறும்போது, ‘‘பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களுக்கு பயன்படும். இதன்மூலம் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT