Published : 04 Feb 2025 01:10 AM
Last Updated : 04 Feb 2025 01:10 AM
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திமுக சார்பில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட அமைதி பேரணி, 20 நிமிடத்தில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை அடைந்தது. அங்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, அருகில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ராஜேந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கயல்விழி செல்வராஜ், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் தமிழரசி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், ஆ.ராசா எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக அமைதிப் பேரணியில், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கருப்பு, சிவப்பு நிற உடையணிந்து கலந்து கொண்டனர். பேரணியையொட்டி வாலாஜா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பென்ஜமின், எஸ்.எஸ்.வைகைச்செல்வன், டி.கே.எம்.சின்னையா, எஸ்.அப்துல் ரஹீம் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, அமமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வி.கே.சசிகலா, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக சார்பில் எம்.பி-க்கள் மு.தம்பிதுரை, சந்திரசேகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரை மாவட்டம் நெல்பேட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோட்டில் அண்ணா நினைவு இல்லத்தில் பெங்களூரு வா.புகழேந்தி மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவு தினம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அண்ணா வழியில் அயராது உழைப்போம். தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம். நம்முடைய நோக்கம் பெரிது. அதற்கான பயணமும் பெரிது. வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள். நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, ‘நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்’ பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.
துணை முதல்வர் உதயநிதி: தமிழகத்தை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை. ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பகுத்தறிவுப் பாதையே நம்மைச் சிறந்த இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று பேசி, அதைக் கடைபிடித்து நமக்கெல்லாம் வழிகாட்டி, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவே மாறி நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் தொடர்ந்து வெற்றிநடை போடுவோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தெளிவான சிந்தனை, ஆற்றல்மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் என்றும் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT