

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்ய அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட இயக்கத்தை தமிழக அரசியலில் காலூன்றச் செய்து, ஏழை எளிய மக்கள் அனைத்து நிலைகளிலும் சமநீதியை பெற வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா எடுத்த முயற்சியின் பலனாக தான் 1967-ம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா ஆட்சி மலர்ந்தது.
அதன்பிறகு அண்ணா வழியில், அவரது கொள்கை, கோட்பாடுகளை எம்ஜிஆர் தமிழகத்தில் வேரூன்றச் செய்து, 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவிவகித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஏழை மக்களின் நலன் காக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதேபோல், ஜெயலலிதா 6 முறை முதல்வராக பதவி வகித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அண்ணா வழியில் பயணித்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மலர செய்ய, தமிழக மக்களும், அதிமுக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று உறுதியேற்போம்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை தீவிரமாக விசாரித்து திமுக அரசு தான் வெளிப்படுத்த வேண்டும். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. ஆனால், அவர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பது ஒன்றும் புரியவில்லை. விஜய் தனது கொள்கை, கோட்பாடுகளை தெளிவாக சொல்ல வேண்டும். 2026 திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.