Published : 04 Feb 2025 12:26 AM
Last Updated : 04 Feb 2025 12:26 AM
விண்வெளித் துறையி்ல் இந்தியா மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என, தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
நாராயணின் சொந்த ஊரான, நாகர்கோவிலை அடுத்துள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஊர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து வி.நாராயணனுக்கு ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்தனர். அங்குள்ள கைலாசநாதர் கோயிலிலும், தனது பெற்றோரின் நினைவிடத்திலும் அவர் வழிபாடு செய்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: இஸ்ரோ தலைவராக என்னை தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும், பெற்றோருக்கும், எனது ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன்பு இஸ்ரோவை பெரும் அறிஞர்கள் வழிநடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களை, இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை கையாள்வதில் இந்திய விண்வெளித் துறை சாதனை படைத்து வருகிறது. தற்போது பாமர மக்களுக்கும் உதவும் வகையில் விண்வெளித்துறை அமைந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் என, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. விண்வெளித் துறையி்ல் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்கும். இறைவன் அருள், பெற்றோர் ஆசியுடன், கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், சாமிதோப்பு தலைமைப்பதி குரு பாலபிரஜாபதி அடிகளார், சிஎஸ்ஐ பேராயர் செல்லையா, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT