“அன்று பெரியாருக்கு சீமான் விழா எடுத்தது ஏன்?” - ஈரோட்டில் புகழேந்தி கேள்வி

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி
Updated on
1 min read

ஈரோடு: “2008-ல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010-ம் ஆண்டு பெரியார், எம்ஜிஆர் கட்அவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்?” என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் 2008-ல் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும், அப்போது அவர் வழங்கிய உபதேசத்தால், திராவிடர்கள் திருடர்கள் என தெரிய வந்ததாகவும், அதுவரை தெரியாமல் போனதாகவும் மேடைகளில் பேசி வருகிறார்.

2008-ல் பிரபாகரன் உபதேசம் கூறிய பின்னர் 2010-ம் ஆண்டு பெரியார், எம்ஜிஆர் கட்அவுட்டுகளை மேடையிலே வைத்து மாபெரும் விழா எடுத்தது ஏன்? உபதேசத்துக்குப் பின்னால் அவர்கள் திருடர்களாக தெரியவில்லையா? எப்படி எல்லாம் மக்களை சீமான் ஏமாற்றுகிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு” என்று கூறி அந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். மேலும் அவர், “தேர்தல் முடிந்த பின்னால் தமிழக முதல்வர், சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாரை இழிவுபடுத்தும் சீமானுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஈரோடு மண்ணில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வெடிகுண்டு வீசுவதாகவும், தலைவர் கொடுத்த வெடிகுண்டு கையில் இருப்பதாகவும் அதை வீசிய பின்னர் புல் கூட அந்த இடத்தில் முளைக்காது என்றும், தமிழகம் முழுவதும் தீப்பற்றி எரியும் என்றும் கொலை வெறியில் இருக்கிறேன் என்றும் சீமான் பேசிய பேச்சுகளில் இருந்து தப்பவே முடியாது. எனவே விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு கொடுத்திருக்க அங்கீகாரத்தை திரும்ப பெரும். தடை செய்யும் நிச்சயமாக அது நடக்கும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in