Last Updated : 03 Feb, 2025 05:10 PM

3  

Published : 03 Feb 2025 05:10 PM
Last Updated : 03 Feb 2025 05:10 PM

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - நடந்தது என்ன?

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்  காவல் நிலைய வளாகம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையம், அரிசி கடையின் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த காவல் நிலையம் வளாகத்துக்குள் நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்தபடி இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர், அவர்கள் யார் என்று விசாரித்துள்ளார். ஆனால், அதற்கு பதில் கூறாமல் மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை எடுத்து, வரவேற்பாளர் இடம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சத்தம் கேட்ட சக போலீஸார் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை உடனடியாக அணைத்தனர். அதற்கு முன்னதாக சிப்காட்டில் உள்ள அரிசி கடையின் மீதும் இதே நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இந்தச் சம்பவம் மாவட்ட காவல் துறையினர் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சிப்காட் காவல் நிலையத்துக்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெட்ரோல் குண்டுகள் வீசியதில் தீ பற்றிய இடம்

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி 7 தனிப்படைகள் அமைத்து பெட்ரோல் குண்டுகள் வீசி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல் கட்டமாக சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல் துறையினர், அவர்களிடம் தீவிரமாக இன்று அதிகாலை (பிப்.3) முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை வட்டாரத்தில் கூறுகையில், “சிப்காட் பகுதியில் சரித்திரப் பதிவேடு பட்டியலில் உள்ள குற்றவாளி வருவர் தனது ஆதரவாளர்களுடன், சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கடைக்காரர்களிடம் தொடர் மாமூல் கேட்டு வசூலித்து வந்ததாக தெரிகிறது. மாமூல் தரமறுக்கும் கடைக்காரர்களுக்கு அச்சுறுத்தலும் அவர் மூலமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடியின் கூட்டாளிகள் சிலர் அப்பகுதியில் உள்ள அரிசி கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அரிசி கடை.

இதற்கிடையே, காவல் துறையினர் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். மேலும், அரிசி கடைக்காரர் தான் தங்களை பற்றி புகார் கொடுத்து இருக்கலாம் என்று ரவுடி கும்பல் நினைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரவுடியின் கூட்டாளிகள் அரிசி கடையின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றதாக தெரிகிறது.

இருப்பினும் ரவுடி கும்பல்தான் இந்தச் சம்பவத்தை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் வேறு யாரேனும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்று பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x