Published : 03 Feb 2025 04:49 PM
Last Updated : 03 Feb 2025 04:49 PM
சென்னை: “வேங்கைவயல் சம்பவத்தில், இந்த அரசைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவு. வேங்கைவயலுக்கு சுதந்திரமாக செல்ல யாரையும் இந்த அரசு அனுமதிப்பதில்லை. விசிகவைச் சேர்ந்தவர் பேசுவார். ஆனால், கொத்தடிமை சாசனம் எழுதப்பட்டது போல, திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல அங்கேயேதான் இருப்பார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (பிப்.3) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அண்ணா பல்கலை.யில் நடந்த பாலியல் வன்கொடுமை, ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை சேஸ் செய்து, அதனால் பெண்கள் எழுப்பிய குரல் எல்லாம் பார்த்து, நாடே சிரிக்கிறது. அது ஆர்.எஸ்.பாரதிக்கு கேட்கவில்லை. இசிஆர் விவகாரத்தில் காவல் துறை முதலில் ஒரு தகவலையும், அழுத்தத்தின் காரணமாக இன்னொரு விளக்கமும் கொடுக்கின்றனர்.
ஈசிஆர் சம்பவத்தில் தொடர்புடைய யாருக்குமே அரசியல் பின்புலம் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால், ஆர்.எஸ்.பாரதி அரசியல் பின்புலம் இருக்கிறது என்று கூறுகிறார். சந்துரு என்பவரைப் பிடித்து, காவல் துறை தேவையானதை மட்டும் எடிட் செய்து அறிக்கை தருகின்றனர். இந்த ஆட்சியில் பெண் ஏடிஜிபி மிரட்டப்படுகிறாரர். திமுகவின் போக்குக்கு வரவில்லை என்றால், எந்த எல்லைக்கும் போகும் அக்கட்சி, நாட்டைக் காக்கும் காவல் துறையே மிரட்டப்படுகிறது. ஸ்டாலின் மாடல் அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.
வேங்கைவயல் சம்பவத்தில், இந்த அரசைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவு. வேங்கைவயலுக்கு சுதந்திரமாக செல்ல யாரையும் இந்த அரசு அனுமதிப்பதில்லை. பத்திரிகையாளர்கள் கூட செல்ல முடியாது. இன்றைக்கு வேங்கைவயல் செல்வதென்றால் பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அங்கு ஒரு மூதாட்டி இறந்தபோதுகூட விசிகவைச் சேர்ந்தவர் செல்லவில்லை. விசிகவைச் சேர்ந்தவர் பேசுவார். ஆனால், கொத்தடிமை சாசனம் எழுதப்பட்டதுபோல, திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதப்பட்டது போல அங்கேயேதான் இருப்பார்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT