புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? - நாராயணசாமி விளக்கம்

நாராயணசாமி | கோப்புப் படம்
நாராயணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான திட்டங்கள் இல்லை. புதுச்சேரியை புறக்கணிக்கும் இப்பட்ஜெட்டை விமர்சித்தால் பதவி பறிபோகும் என முதல்வர் பாராட்டியுள்ளார். மத்திய பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி விமர்சித்தால் மறுநாள் அவருக்கு முதல்வர் நாற்காலி இருக்காது என்பதால்தான் வரவேற்றுள்ளார். மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யும் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை.

இம்முறை மீனவர்கள் மீது கொடுர தாக்குதல் நடந்துள்ளது. சிறியநாடான இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். பிரதமர் நேரடியாக தலையிடவேண்டும். மத்திய அரசு மெத்தனமாக இருக்கக்கூடாது. மருத்துவ மேல்படிப்பில் மத்திய அரசே முழுமையாக மாணவர் சேர்க்கை நடத்தும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு மாநில உரிமையை பறிக்கும் செயல். பழைய முறை தொடர உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்வேண்டும்.

புதுச்சேரியில் பத்திரப்பதிவுத்துறை மட்டுமில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டியதிலும் ஊழல் நடந்துள்ளது. வெளிப்படையாகவே லஞ்சம் கேட்கின்றனர். தற்போது ஊழல் ஆட்சி நடக்கிறது. ஊழல் மலிய முக்கியக்காரணம் முதல்வர், அமைச்சர்கள்தான். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும்.

இண்டியா கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது. கூட்டணியில் இருப்போர் தனித்தனியாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். கூட்டணியில் இருப்போர் தனித்து போட்டியிட விரும்பினால் அது அவர்கள் விருப்பம்தான். உதாரணமாக கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி தனித்து டெல்லி தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தமுடியாது.

இதில் நான் ஒரு குறிப்பிட்ட கட்சியை பற்றி தெரிவிக்கவில்லை. அதேபோல் மதுபான ஆலைத்தொழிற்சாலைகள் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனதெரிவித்தேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கேட்கிறீர்கள். இதில் கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன் என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in