Published : 03 Feb 2025 03:41 PM
Last Updated : 03 Feb 2025 03:41 PM
மதுரை: கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு எனக்கு சொந்தமான வாகனத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் கொட்டியதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எனது வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணை நீதிமன்றம் என் மனுவை தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் வாகனம் விதிமுறைகளை மீறி கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது. இதை அனுமதிக்க முடியாது.
இது போன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் நடத்த முழு அதிகாரம் உள்ளது எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. குறிப்பாக 75 கிலோமீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக்கூடாது என்றும் மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்ட விதிகள் உள்ளது. ஆனால் இதனை எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தீவிரமான குற்றச்செயலாகும்.
மேலும் உள்ளாட்சி சட்ட விதிகள் படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட விதிகள் உள்ளது. அதை யாரும் செய்வதில்லை. எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,உள்ளாட்சித்துறை செயலர், ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது.
இது போன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதளை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT