Published : 03 Feb 2025 03:11 PM
Last Updated : 03 Feb 2025 03:11 PM

ராணிப்பேட்டை காவல்நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: அன்புமணி கண்டனம்

சென்னை: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.

குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள். தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும்.

ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இழந்த பெருமையை மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x