Published : 03 Feb 2025 12:36 PM
Last Updated : 03 Feb 2025 12:36 PM
சென்னை: திருப்பரங்குன்றத்தைக் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா என்றும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார். இது ஜனநாயக படுகொலை. அதிலும் கோயிலின் புனிதம் காக்க வரும் பக்தர்களை தடுப்போம், கைது செய்வோம், வாகனங்களை பறிமுதல் செய்வோம் என மிரட்டுவது தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை திமுக நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
முஸ்லிம்களை திருப்பரங்குன்றம் மலையை பிரச்சினையாக்க தூண்டிவிட்டது திமுக தான். முருகனின் மலையை சிக்கந்தர் மலை என பேச அனுமதி அளித்து ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த விட்டு வேடிக்கை பார்த்தது காவல்துறை. அப்படியென்றால் இந்த திமுக அரசு மதக்கலவரத்தை தூண்டுவதற்கு காவல்துறையை மாவட்ட நிர்வாகத்தை ஏவி விட்டுள்ளார்? என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய அக்கிரமமான செயலை ஜனநாயக வழியில் இந்துக்கள் கண்டித்து போராட அனுமதி மறுக்கிறது.
ஜனநாயக உரிமைகளை அதிகாரத்தின் மூலம் அடக்கி விடலாம் என்று ஆளும்கட்சி நினைத்தால் அதன் விளைவுகளுக்கு அரசுதான் பொறுப்பாகும். அரசின் அநாகரிக நடவடிக்கைகளுக்கு நீதித்துறையை வளைக்க நினைக்கிறது காவல்துறை. இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு நேற்று தான் அனுமதியில்லை என்று கூறியுள்ளது. ஆனால் துண்டு பிரசுரம் கொடுத்தவர்களை, போஸ்டர் ஒட்டியவர்களை, தண்டோரா போட்டவர் என பலர் மீது தடையை மீறியதாக மீது கடந்த சில நாட்களாக பொய் வழக்கு போட்டுள்ளது காவல்துறை.
ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு 48 மணிநேரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஒருநாளில் அனுமதி அளிப்பதும், பொதுமக்கள் பிரச்சினை என்றால் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து அனுமதி மறுத்து வழக்கு போடுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
மதுரை - திருப்பரங்குன்றம் மலையை வக்ஃப் சொத்து என்று கூறி மலைமீது அசைவ பிரியாணி சாப்பிட நவாஸ்கனிக்கு எவ்வாறு காவல்துறை அனுமதி அளித்தது? அசைவம் சாப்பிடும் நாளில் கோயிலுக்கு வருவதை தவிர்ப்பது தமிழர்கள் பண்பாடு. ஆனால் பீப் பிரியாணி கொண்டு போய் சாப்பிட சட்டப்படி தடை இருக்கிறதா என்ற கேள்வி எத்தகைய விஷமத்தனமானது? அதையும் மாவட்ட காவல்துறை, ஆட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது தார்மீக ரீதியில் இந்துக்களை வேண்டும் என்றே வம்புகிழுக்க துணை போனதும் சரியான செயலா? ஆனால் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை சட்டத்தின் மூலம் தடுத்துவிடலாம் என திமுக பகல் கனவு காணுகிறது.
கோடான கோடி முருக பக்தர்களை உலக முருக பக்தர்கள் மாநாடு என ஏமாற்ற நாடகம் போட்டது திமுக. முருகனின் முதல் படை வீட்டை வக்ஃப் சொத்து என்று ஆளும்கட்சி எம்பி நவாஸ் கனி கூறுவதன் மூலம் திமுகவின் துரோக புத்தி வெளிப்பட்டு விட்டது. மதுரை வீரமிக்க மண். முருகனின் அம்சமான முத்துராமலிங்க தேவர் திருமகனார் மண். இங்கு முருகனின் மலைக்கு அவமானம் என்றால் இந்துக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
எனவே இந்துக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட ஜனநாயக வழியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். நமது நியாயமான கோரிக்கைக்கு தமிழக அரசும் காவல்துறையும் நீதிமன்ங்களும் உணர்ந்து ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்.
நமது கோரிக்கையை ஏற்காமல், அதிகார பலத்தால் ஜனநாயக குரல்வளையை நெருக்கி பக்தர்கள் உணர்வுகளை தடுத்துவிடலாம் என ஆளும்கட்சி நினைத்தால், மதுரை மண்ணில் மீண்டும் ஒரு இந்துக்களுக்கான சுதந்திர அறப்போராட்டத்தை தடையை மீறி முருக பக்தர்களின் ஆதரவோடு இந்து முன்னணி நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT