Published : 03 Feb 2025 11:17 AM
Last Updated : 03 Feb 2025 11:17 AM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை (பிப்.4) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில், “வரும் 4-ம் தேதி இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்:
இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினையின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இவற்றால் திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சினை சர்ச்சையானது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 4-ல் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி இந்து முன்னணியின் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் கலாநிதி மாறன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மதத்தினர் திரண்டு வருமாறு இந்து அமைப்புகள் சார்பில் சமூக வலை தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி பிப். 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT