

2004-ம் ஆண்டு நேரிட்ட சுனாமி பேரலை தாக்குதலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோயின.
கீச்சாங்குப்பம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரையோரம் பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அப்போதைய நாகை ஆட்சியரும், உணவுத் துறை செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், 2 குழந்தைகளும் நாகையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டனர்.
வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்றும் ராதாகிருஷ்ணன் பெயர் சூட்டினார். மேலும், அப்போது இவர்களுடன் சேர்த்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 150 குழந்தைகள் மீதும் ராதாகிருஷ்ணன் தனிக்கவனம் செலுத்தி, பணிக்கு மத்தியில் நாள்தோறும் அங்கு சென்று சில மணி நேரங்களை செலவழித்தார். குழந்தைகள் அனைவரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றும் அவரது மனைவியை அம்மா என்றும் அழைத்து வந்தனர்.
பின்னர், பதவி உயர்வில் ராதாகிருஷ்ணன் பல இடங்களுக்குச் சென்றாலும், நாகை வரும்போதெல்லாம் காப்பகத்துக்குச் சென்று குழந்தைகள் பார்த்துச் செல்வார்.
குழந்தைகள் வளர்ந்து பலரும் திருமணமாகி சென்றனர். சவுமியா, மீனா ஆகியோர் 18 வயதை எட்டியதால், காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்தது. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அனுமதியுடன் நாகப்பட்டினம் கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி- மணிவண்ணன் தம்பதியினர் 2 பேரையும் தத்தெடுத்துக் கொண்டனர். பிஏ பட்டதாரியான சவுமியாவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்த நிலையில், மீனாவுக்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி, உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகள் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.