தமிழகத்தில் ‘ராம்சர்’ தளங்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 5 தளங்கள்

தமிழகத்தில் ‘ராம்சர்’ தளங்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 5 தளங்கள்
Updated on
2 min read

தமிழகத்தில் ‘ராம்சார்’ தளங்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டதில் 5 தளங்கள் உள்ளன.

1971 பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் நடைபெற்ற ஈர நிலங்கள் பாதுகாப்பு மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் கொண்டுசென்று, ஈர நிலங்களைப் பாதுகாக்கும் சிறப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ‘ராம்சர் ஒப்பந்தம்’ என்று பெயர்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவும், ஈர நிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது. நாட்டில் 27,403 சதுர கிலோமீட்டர் ஈர நிலப் பரப்புகள் அமைந்துள்ளன. ‘ராம்சர்’ ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டுவரை நாட்டில் 85 நிலங்களுக்கு ‘ராம்சார்’ அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் 18 ஈர நிலங்கள் ‘ராம்சார்’ தளங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் ஆகிய 3 தளங்கள் உள்ளன.

இந்நிலையில், உலக ஈர தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம், தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உத்வா ஏரி, சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஹேச்ரோ பள்ளி சதுப்பு நிலப்பகுதி ஆகிய 4 இடங்கள் ‘ராம்சர்’ தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்முலம் ‘ராம்சர்’ தளங்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 89-ஆகவும், தமிழகத்தில் 20-ஆகவும் உயர்ந்துள்ளன. நாட்டிலேயே ‘ராம்சர்’ தளங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 தளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, "சில பகுதிகளை ‘ராம்சர்’ தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் மட்டுமே ஈர நிலங்கள் மேம்பட்டு விடாது. அவற்றில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுப்பது, நீர் நிலைகளில் கழிவுநீர், குப்பை கொட்டாமல் தடுப்பது போன்றவற்றால் மட்டுமே அவற்றை மேம்படுத்த முடியும். மேலும், ஈர நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பைஅரசு உருவாக்க வேண்டும். ஈர நிலங்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலமே அவற்றின் மேம்பாட்டை சாத்தியமாக்க முடியும்’ என்றனர்.

முதல்வர் மகிழ்ச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், "ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உலக ஈர நிலங்கள் தினத்தில் இந்த தகவலைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழகத்தில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நாட்டிலேயே மிக அதிகமாக, 20 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் 2021-ல் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈர நிலங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. வளமான இயற்கை மரபை பாதுகாக்க மேலும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in