

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் இந்து அமைப்பினர் கூடுவதை தடுக்கவும், திருப்பரங்குன்றத்தை கலவரக் குன்றமாக மாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கவும் மதுரை மத நல்லிணக்க அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் மத நல்லிணக்க அமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு வதந்திகளை பரப்பி வருகின்றன.
திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் அங்கு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகளும், போலீஸாரும் பாஜகவுக்கு ஆதரவாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம்.
இதையும் மீறியும் அங்கு எதாவது நடைபெற்றால் நாங்களும் போராட்டம் நடத்துவோம். திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறையை திடீரென தடுக்கின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தை தேர்தல் நோக்கத்திற்காக கலவரக் குன்றமாக மாற்ற முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.