Published : 02 Feb 2025 05:31 PM
Last Updated : 02 Feb 2025 05:31 PM
மதுரை: விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.
புதிதாக வீடு, இடம் வாங்குவோர் சுபமுகூர்த்த தினத்தில் கிரயம் பத்திரம் பதிவு செய்ய விரும்புவர். இவர்களின் வசதிக்காகவும், வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும் ஞாயிற்றுக் கிழமையான இன்று தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என, அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “மாநில ஒருங்கிணைப்பு குழுவின் முடிவின்படி, பிப்., 2ம் தேதியை பணி நாளாக அரசு அறிவித்தாலும், அதை புறக்கணிப்பு செய்வது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து பதிவுத்துறை பணியாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் என.” அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இன்று விடுமுறையாகவே கருதி செயல்படவில்லை. பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு போகாததால் பத்திர எழுத்தர்களும் தங்களது அலுவலகங்களையும் திறக்கவில்லை. ஒரு சில அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கென சென்றிருந்த சிலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கெனவே அதிக வருவாய் கொண்ட 100-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் அரசு உத்தரவின்பேரில் ஓராண்டுக்கு மேலாக சனிக்கிழமையிலும் பணிபுரிகிறோம். தற்போது, அரசின் வருவாயை கூட்டவேண்டும், பொதுமக்களுக்கு வசதி செய்யவேண்டும் என, ஞாயிற்றுக்கிழமையிலும் பணிக்கு வரச்சொன்னால் வீட்டிலுள்ள வேலையை செய்யாத சூழல் உள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை பதிவுத்துறை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவின்படி ஒட்டுமொத்தமாக சுமார் 575 பத்திரப்பதிவு அலுவலங்களிலும் இன்று யாரும் வேலைக்கு போகவில்லை.” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT