Last Updated : 02 Feb, 2025 05:41 PM

 

Published : 02 Feb 2025 05:41 PM
Last Updated : 02 Feb 2025 05:41 PM

கைதியின் உடல்நலன் சார்ந்து தேவைப்படும் குறைந்தபட்ச வசதியை மறுக்கக் கூடாது: ஐகோர்ட்

மதுரை: சிறைக் கைதிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, கைதிக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ஆர்.ராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'என் மகன் பாளை மத்திய சிறையில் கைதியாக உள்ளார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளது. நன்கு படித்துள்ளார். சிறைக்குள் நன்னடத்தையுடன் உள்ளார். இவற்றை கருத்தில் கொண்டு என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். என் மனுவை பரிசீலித்து என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது. அவரால் தரையில் படுக்க முடியாது. இந்திய கழிப்பறையை பயன்படுத்த முடியாது. இதனால் சிறையில் மகனுக்கு படுக்கை வசதியும், வெஸ்டர்ன் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும். இந்த வசதிகள் ஏ வகுப்பு சிறைவாசிகளுக்கு தான் கிடைக்கும். இதனால் ஏ வகுப்பு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வசதிகள் ஏ வகுப்பு வழங்கினால் தான் கிடைக்கும். இதனால் ஏ வகுப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தண்டனைக் கைதி, விசாரணைக் கைதி, குண்டர் சட்டக் கைதிகள் யாராக இருந்தாலும் சிறை கைதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் உண்டு. சிறை விதிகள் குறிப்பிட்டு எல்லைக்குள் நின்று விடக்கூடாது. அதன் எல்லைகள் விரிவடைய வேண்டும். சிறை கைதிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, கைதிக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது.

மனுதாரர் மகனின் கால் மூட்டின் நிலை அவரால் இந்திய கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தரையில் படுக்க முடியாமலும் உள்ளார். இந்த சூழ்நிலையில் மனுதாரரின் மகனுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது சிறை அதிகாரிகளின் கடமையாகும். இதனால் மனுதாரர் சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வேண்டும். சிறை கண்காணிப்பாளர் சிறைத்துறை டிஐஜி வழியாக உள்துறை செயலாளருக்கு உரிய பரிந்துரையை அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரை அடிப்படையில் உள்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x