தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பிப். 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, செர்வாலர் அணை, சேரன்மகாதேவி, தேனி மாவட்டம் பெரியகுளம், தென்காசி மாவட்டம் ராமநாதி அணை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப். 3 முதல் 7-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in