அறநிலையத் துறையின் உத்தரவில் தவறில்லை: நித்யானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

அறநிலையத் துறையின் உத்தரவில் தவறில்லை: நித்யானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: மடங்களை நிர்வகிக்க பொறுப்பு அலுவலரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்யானந்தா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளத்தில் உள்ள அருணாச்சல ஞானதேசிக மடம், பொது சாதுக்கள் மடம், தஞ்சாவூர் பால்சாமி மற்றும் சங்கரசுவாமி மடத்துக்கு அறநிலையத் துறையால் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அறநிலையத் துறையின் உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்தாண்டு செப்.4 அன்று உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் வழக்கறிஞர் காட்சன் சுவாமிநாதன் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே அந்த மடங்களின் மடாதிபதியாக இருந்த ஆத்மானந்தா, இந்த மடங்களுக்கு நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்திருந்தார்’’ என்றார்.

பதிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ‘‘தற்போது நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. அவர் தென்அமெரிக்க நாடான ஈக்குவிடாரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் இந்த மடங்களுக்கு எந்த வகையிலும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

‘ஆனந்தாக்கள்’ என்றாலே பிரச்சனை: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்ற ஆனந்தாக்கள் என்றாலே பிரச்சினையாகத்தான் இருக்கிறது. நித்யானந்தா தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்ற விவரமும் தெரியவில்லை. மடத்துக்கு சொந்தமான சொத்துகள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த மடங்களின் நிர்வாகத்தை கையில் எடுத்து முறைப்படுத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்பதால் பொறுப்பு அலுவலரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த தவறும் இல்லை. நித்யானந்தா மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது’’ எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in