

சென்னை: சென்னை ஈசிஆர் சாலையில் கடந்த 25-ம் தேதி அதிகாலை காரில் சென்ற பெண்களை, இளைஞர்கள் 2 காரில் பின் தொடர்ந்து அவர்களது வீடுவரை துரத்தி, விரட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 25-ம் தேதி அதிகாலை தனது தோழிகளுடன் காரில் இசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பக்கிங்ஹாம் கால்வாய் பாலத்தை தாண்டி செல்லும்போது இரு சொகுசு கார்களில் (ஒரு காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது) வந்த இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்து வழிமறித்தனர்.
பின்னர், இளம் பெண்களின் கார்களை விரட்டிச் சென்று தகராறு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் கானத்தூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் இசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா, சுங்கச் சாவடியில் உள்ள கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த சம்பவத்தில் 7 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், தமிழ்குமரன், அஸ்வின், விஸ்வேஸ்வர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம்பரத்தைச் சேர்ந்த சந்துரு உள்ளிட்ட 3 பேர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், தங்களது கார் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் கார் லேசாக மோதிவிட்டு நிற்காமல் செல்வதாக நினைத்து இளைஞர்கள் விரட்டியுள்ளனர். ஆனால், உண்மையில் அப்படி ஏதும் நடைபெறவில்லை. இளம்பெண்களின் காரை விரட்டிச் சென்ற கார் ஒன்றில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அந்த காரை ஓட்டிவந்த நபர் சுங்கச்சாவடிகளிலும், கட்டண நிறுத்துமிடங்களிலும் இலவசமாக செல்வதற்கும், இலவசமாக நிறுத்துவதற்கும் அந்த காரில் கட்சிக் கொடியை கட்டியுள்ளார். அவருக்கும், அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இல்லை.
வழக்கில் சிக்கியுள்ள தாம்பரத்தைச் சேர்ந்த சந்துரு மீது ஒரு ஆள் கடத்தல் வழக்கும், ஒரு மோசடி வழக்கும் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அனிஷ் என்பவருக்கு சொந்தமான காரை வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
சம்பவத்தன்று சந்துரு, கைது செய்யப்பட்ட சந்தோஷ் உள்ளிட்டோர் இரு கார்களில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு சுற்றி பார்க்கும் நோக்கத்துடன் வந்துள்ளனர். அவர்களிடம் வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கின்றனர்.
ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கின்றார். ஒரு நபர் தனியாக தொழில் செய்து வருகிறார். வழக்குப் பதிவில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை நடுநிலைமையுடன், நேர்மையுடன் விசாரணை செய்கிறது.
இச் சம்பவத்தையடுத்து கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முட்டுக்காடு பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. காவல்துறையினரின் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.