குளங்கள், சாலைகள் சீரமைக்க ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு

குளங்கள், சாலைகள் சீரமைக்க ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு
Updated on
1 min read

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப்புக்காக ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25-ம் ஆண்டுக்கு கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளுக்காக மாநில அரசின் நிதி ரூ.250 கோடி உட்பட ரூ.1,147.28 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு பிப்.26-ம் தேதி விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, கடந்தாண்டு ஜூலை மாதம், மாநில அரசின் திட்ட நிதியில் இருந்து ஒரு பகுதி அதாவது ரூ.62.50 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் அடுத்தகட்டமாக ரூ.62.50 கோடியும், நவம்பர் மாதம் ரூ.62.50 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு மாநில அரசு ஒதுக்கிய ரூ.250 கோடியில் ரூ.187.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் தினசரி ரூ.8 முதல் ரூ.10 கோடி செலவினம் உள்ளதால், தேவையான நிதியை வைத்திருக்க வேண்டியிருப்பதாகவும், எனவே மீதமுள்ள ரூ.62.50 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.62.50 கோடி நிதியை இறுதி தவணையாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in