போராட்ட அனுமதி கோரும் கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

போராட்ட அனுமதி கோரும் கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடந்தாண்டு நவ.7-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆனால், போலீஸார் நவ.6-ம் தேதி அனுமதி மறுத்ததாகவும், இதனால் வெளியூர்களில் இருந்து கட்சித்தொண்டர்கள் சென்னைக்கு வந்தும், திட்டமிட்டபடி பேரணி செல்ல முடியாததால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.1 கோடி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கு சென்னை மாநகர காவல்துறை தரப்பில், ‘‘பேரணி தொடர்பாக பல்வேறு விவரங்களை அளிக்கும்படி கோரியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோருவது பொருத்தமற்றது’’ என தெரிவிக்கப்பட்டது.

48 மணி நேரத்துக்குள் முடிவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக நீட்டிக்கும் வகையில் தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த விண்ணப்பங்களின் மீது 48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டுமென காவல் ஆய்வாளர்களுக்கு, காவல் ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல, 10 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பித்தும் புதிய தமிழகம் கட்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அக்கட்சிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

பாமக வழக்கு தள்ளுபடி: இதேபோல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திமுகவினருக்கு மட்டும் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி பாமக கொள்கை பரப்பு செயலாளர் சேகர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், ‘‘போலீஸார் எந்த பாரபட்சமுமின்றி தங்களது கடமையை செய்யச் வேண்டும். அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவு எடுக்கும் முன்பாக சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க உரிய அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in