Published : 01 Feb 2025 12:43 AM
Last Updated : 01 Feb 2025 12:43 AM
திருப்பரங்குன்றம் மலையில் காலநடைகளை பலியிட தடை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு திருப்பரங்குன்றம் மலை. இந்த மலையைச் சுற்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. இது தொடர்பான வழக்கில் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோயிலுக்கு சொந்தமானது என்றும், மலைப்பாதையை தர்கா செல்ல பயன்படுத்தலாம் என கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்து சைவ ஆகம விதிகளுக்கு எதிராகவும் மலை உச்சியில் கால்நடைகளை பலியிடுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு யாரும் எந்த தொந்தரவும் அளிப்பதில்லை.
தர்கா நிர்வாகத்தின் பயன்பாட்டில் இருக்கும் பஞ்ச பாண்டவர்கள் படுகை தொல்லியல் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கு பச்சை வர்ணம் பூசியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் கால்நடைகளை பலியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இதே விவகாரம் தொடர்பான வழக்குகள் முதல் அமர்வில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முதல் அமர்வில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT