மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப் இல்லையா?

மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப் இல்லையா?
Updated on
2 min read

மதுரை: மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப்கள் இல்லாததால் உயர் அதிகாரிகளின் கள ஆய்வுக்கு தனியார் ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையில் ரூ.28 லட்சத்து 56 ஆயிரம் வழங்க மாநகராட்சியின் ஒப்புதலுக்குத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு தனித்தனியாக கார் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர துணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், கல்வி அலுவலர், உதவி ஆணையர் (வருவாய்), உதவி ஆணையர் (கணக்கு), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், 5 செயற்பொறியாளர்கள், 5 உதவி செயற் பொறியாளர்கள், நகரமைப்புப் பிரிவில் செயற்பொறியாளர் (திட்டம்), 5 உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்), சுகாதார நகர் நல அலுவலர், உதவி நகர் நல அலுவலர் மற்றும் சட்ட அலுவலர் உள்ளிட்டோருக்கு 38 கார், ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், போதுமான வாகனங்கள் இல்லாமல் அதிகாரிகள் கள ஆய்வுகளுக்குச் செல்லும்போது வாடகைகார்களை எடுத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம் ஒரு கார் ஒரு மாதத்துக்கு ரூ.39,000 மதிப்பீட்டில் வாடகைக்கு எடுக்கப்படுவதாகவும், இதுபோல் 8 வாகனங்கள் ஒவ்வொரு மாதமும் வாடகைக்கு எடுக்கப்படுவதாகவும், இந்த வகையில் கடந்த 2023 டிச.4 முதல் இதுவரை ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுத்த வகையில் ரூ.28 லட்சத்து 56 ஆயிரம் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கி உள்ளது.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், ‘‘கார்கள் பழுதடைந்தால் அவற்றைப் பராமரிக்க வேண்டும். சென்னையில் இருந்து ஆய்வுக்காக வரக்கூடிய உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் நிரந்தரமாகவே புதிய கார்கள் வாங்கி வைக்கலாம்.

அதற்காக, மாதந்தோறும் வாடகை ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுத்து இவ்வளவு தொகை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் செலவு செய்வது ஏற்புடையது அல்ல. மக்களுடைய அடிப்படை பணிகளுக்கே போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். செலவைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்திலிருந்து மதுரை வரை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணி களின் ஆய்வுக்காக மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமில்லாது சென்னையில் இருந்தும் அடிக்கடி கண்காணிப்பு அலுவலர்கள், உயர் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களை, நல்ல நிலையில் இல்லாத மாநகராட்சி கார்களில் அழைத்துச் செல்ல இயலாது. மேலும் உயர் அதிகாரிகள் திடீரென்றுதான் சென்னையில் இருந்து வருகிறார்கள். முன்கூட்டியே கார்களை தயார் செய்தும் வைத்திருக்க இயலாது.

அதனால், தனியாரிடம் கார்களை வாடகைக்கு எடுத்துச்செல்ல வேண்டியுள் ளது. மேலும், மாநகராட்சி 100 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், புதிய சாலைப் பணிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்களைப் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் குழு செல்ல வேண்டி இருக்கிறது.

போதுமான ஜீப், கார்கள் இல்லாததால் அவசியம் கருதியே ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற பெரிய திட்டங்கள் நிறைவுபெற்ற பிறகு வாடகைக்கு ‘டாக்ஸி’களை எடுக்க வேண்டிய தேவை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in