Published : 31 Jan 2025 06:08 AM
Last Updated : 31 Jan 2025 06:08 AM
சென்னை: வாகன சோதனையின்போது அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 2018-ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உட்பட சில காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அவர்களை நிறுத்தி உதவி ஆய்வாளர் விஜயரங்கன் விசாரித்தார்.
மேலும், இருவரும் மது போதையில் இருந்ததாக கூறி பைக் சாவியையும் அவர் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதையடுத்து உடன் வந்த சுரேஷ், தனது நண்பர் ராதாகிருஷ்ணனை காப்பாற்றும்படி உதவி ஆய்வாளர் விஜயராகவனிடம் பலமுறை கேட்டுள்ளார்.
ஆனால், உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் விஜயராகவன் அலட்சியம் செய்துள்ளார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின்பு ராதாகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக உயிரிழந்த ராதாகிருஷ்ணின் தாயார் ரேவதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதற்கான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை. ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய நபரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறலாகும். எனவே, அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனை இழந்த ரேவதிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT