

சென்னை: கஸ்தூர்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் 6 இடங்களில் நாளை பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் தொடங்குகிறது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஸ்தூர்பா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டுமுதல் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் இதுவரை 60 மெட்ரிக் டன் கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்ய அனுப்பப்பட்டு, நிலங்களில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் அடையார் கே.என்.ஆர்.ஏ. சமூக நலக்கூடம் (நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் எதிரில்), வேளச்சேரி ஆன் ஆக்சிஸ், திருவான்மியூரில் சிவகாமிபுரம் 2-வது கிராஸில் உள்ள ஆர்.எம்.எஸ்.எம் அசோசியேஷன் உடற்பயிற்சி கூடம், மேற்கு தாம்பரத்தில் ஸ்ப்ரீகோ மறுசுழற்சி மையம், சின்ன நீலாங்கரையில் சிங்காரவேலன் ஓஷன்சைடு நலச்சங்கம், கோட்டூர்புரத்தில் சென்னை கார்ப்பரேஷன் பூங்கா ஆகிய 6 இடங்களில் காலை 10 முதல் மாலை 5 மணிவரை பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில், பழைய துணிகள், காலணிகள், பைகள், மின்னணுக்கழிவு, காலி மாத்திரை அட்டைகள், மை பேனாக்கள், மெத்தைகள், தலையணைகள் (அடையாரில் மட்டும்), எக்ஸ்ரே பிலிம்கள், கண்ணாடி பாட்டில்கள், கடினமான மற்றும் மென் பிளாஸ்டிக்குகள், செய்தித்தாள் மற்றும் புத்தகங்களை வழங்கலாம். அவை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் இருப்பது அவசியம். மேலும் விவரங்களுக்கு 86674 99135 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.