நாங்கள் தேசப்பிதா காந்தியை நேசிப்பவர்கள்: ஆளுநரின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்

நாங்கள் தேசப்பிதா காந்தியை நேசிப்பவர்கள்: ஆளுநரின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்
Updated on
1 min read

‘அண்ணா வழி வந்த நாங்கள் தேசத்தையும், தேசப் பிதாவையும் நேசிப்பவர்கள். மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகளை அரசியல் ஆக்காதீர்கள்’ என்று ஆளுநருக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தி நினைவு தின நிகழ்வை காந்தி மண்டபத்தில் நடத்தாமல் அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதா என்று ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டம், தியாகிகள் தின அனுசரிப்புகள் ஆகியவை மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில்தான் நடைபெறும். அங்கு மெட்ரோ ரயில் பணி நடப்பதால், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிய காந்தி சிலையை அரசு கடந்த 2022-ம் ஆண்டு நிறுவியது. அதுமுதல் மேற்கண்ட நிகழ்வுகள் அங்குதான் நடக்கின்றன. கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த நிகழ்வுகளில்தான் ஆளுநர் ரவியும் கலந்து கொண்டார்.

தவிர, அவர் கூறுவதுபோல தற்போது இந்த நிகழ்வு அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடைபெறவில்லை. பாரம்பரியமிக்க எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் பாந்தியன் சாலையை ஒட்டியுள்ள பிரதான நுழைவுவாயில் முன்பு இருக்கும் காந்தி சிலைக்குதான் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் காந்திஜி கேலி செய்யப்பட்டதாகவும் ஆளுநர் விமர்சித்துள்ளார். கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, திராவிடர் கழக பொதுச் செயலாளராக இருந்த அண்ணா, ‘சுதந்திர தினம் இன்பநாள்’ என்று சொல்லி, பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடாமல் பாதுகாத்தார். அவரது வழி வந்த நாங்கள் தேசத்தையும், தேசப் பிதாவையும் நேசிப்பவர்கள். தேசப்பிதாவை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல.

இன்று தேசப்பிதா மறைந்த தினம் மட்டுமல்ல, இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினம் என்பது வரலாறு. மதவெறிக்காக காந்தியை கொன்றவர்கள் இன்று ரத்த பசியோடு அலைகின்றனர். ஆளுநர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள்தான் அவர்களை எதிர்த்து களமாடுகின்றனர். மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் இருந்தவர்களையும், அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்வதில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடம் ஒற்றுமை, நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in