குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கும் போலீஸார்: உள்துறை செயலர் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கும் போலீஸார்: உள்துறை செயலர் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவு
Updated on
1 min read

வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் இன்று (ஜன.31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சுந்தர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘‘கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அதே ஆண்டே முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இது முதல் வழக்கு கிடையாது. இதுபோல பல வழக்குகளில் போலீஸார் முறையாக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது கிடையாது. ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் அந்த எஃப்ஐஆர் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அதேபோல வழக்கில் புலன் விசாரணையை தொடங்கியதும் வழக்கு ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்தும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு புலன் விசாரணையை முடித்து குறித்த காலத்துக்குள் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் சட்டரீதியிலான நடைமுறை.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான காவல் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது இல்லை. வசதி படைத்தவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்கின்றனர். ஆனால் வறுமையில் வாடும் அப்பாவி பொதுமக்கள் நீதிக்காக போராட வேண்டியுள்ளது. பல வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும்கூட போலீஸார் அதை மதித்து நடப்பதில்லை.

2015-ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை அதே ஆண்டு முடித்து வைத்துள்ள போலீஸார், அதுதொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு எந்த தகவலும் இத்தனை ஆண்டுகளாக தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இதுபோல போலீஸாரால் பாதிக்கப்படும் அனைவராலும் உயர் நீதிமன்றத்தை நாடி விசாரணையை துரிதப்படுத்த உத்தரவு பெற முடியாது. இருப்பினும் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யவும், விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ஏராளமான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.

போலீஸாரின் சட்டவிரோத செயல்களால் அப்பாவி பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறித்த காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது குறித்து தமிழக உள்துறைச் செயலர் இன்று (ஜன.31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in