

மதுரை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் செல்போன் அழைப்பு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
மேலூர் அ.வல்லாளப்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “டங்ஸ்டன் சுரங்க திட்டம் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கொண்டு வரப்பட்டது. தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடந்திராது ஒன்று. மாநில அரசு மிரட்டலுக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது என சொல்கிறார்கள். உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளை பார்த்து பயப்படாத மத்திய அரசு திமுக அரசை பார்த்து பயந்து விடுவோமா.
தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக மோடி இருக்கின்றார். டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறுகிறார். அந்த கடிதத்தை வெளியிடலாமே. மாநில அரசு அனுமதி வழங்கிய பிறகு தான் ஏலம் அறிவிக்கப்பட்டது. ஏலத்திற்கு முன் மாநில அரசு எழுதியதாக கூறப்படும் கடிதத்தை வெள்ளை அறிக்கையாக, வேங்கைவயல் அறிக்கை போல் வெளியிட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞனசேகரன் செல்போன் விவரம் என்னிடம் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவோம். ஞானசேகரன் சம்பவம் நடந்த போது 23-ம் தேதி, 24-ம் தேதி யாரிடம் பேசினார் என்ற விவரம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் செய்தியாளர்கள் தன்னுடைய வேலையை சரியாக செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பாஜக துணை நிற்கும், அவர்கள் கைது செய்யப்பட்டால் பாஜக சார்பில் நீதிமன்றம் வரை உடன் நிற்போம். தற்போது அண்ணா பல்கலைக்கழக வழக்கு விசாரணை திசை மாறி செல்கிறது.
ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து காவல்துறை பெண்கள் மீது குற்றம் சாட்டி, அவர்கள் மீது கரியை பூசி வருகிறது. சென்னையில், உள்ள சில காவல்துறை அதிகாரிகள் அங்கேயே பணியாற்ற வேண்டும் என்பதற்காக அறிக்கை தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதல்வர் பேச வேண்டும்” என்று அண்ணாமலை கூறினார்.