முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (ஜன.30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சட்டத்துறை வல்லுநர்களுடன் பேசவுள்ளனர். தமிழகத்தின் உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கக்கூடாது. குறிப்பாக இந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், என்னென்ன மாதிரியான கோரிக்கைகளை வலியுறுத்துவது என்பதெல்லாம் விவாதித்து பின்னர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

மற்ற மாநிலங்களுடன் இதுதொடர்பாக பேசுவதில் இருக்கக்கூடிய சிரமம் என்னவென்றால், இங்கு BC,MBC, வகுப்பில் இடம்பெற்றுள்ள சமூகங்கள், மற்ற மாநிலங்களில் இருப்பது இல்லை. இங்கு சாதகமாக இருக்கும் அம்சங்கள் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு பாதகமாக இருக்கும். நமக்கு பாதகமாக இருப்பவை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இதில் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைப்பது சரியாக இருக்காது. தமிழகத்தின் உரிமைகள் பறிபோகக்கூடாது.

காலம் காலமாக சமூகநீதியையும், இடஒதுக்கீட்டு உரிமையையும் தமிழகம் நிலைநிறுத்தி வருகிறது. இதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். அந்தவகையில், மிக விரைவில் சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், அரசு மருத்துவர்களுக்குத்தான் பாதிப்பு. அவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தந்துகொண்டிருக்கும் உரிமைகள் முழுமையாக பாதிக்கப்படும்.

அதேபோல், தமிழகத்தில் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் இந்த தீர்ப்பால் முழுமையாக பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 69% இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் இருக்கிறது. 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த இடங்களைப் பறித்து மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

ஏற்கெனவே, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வழக்கில் இதுபோன்றதொரு சோதனை வந்தது. அப்போது தமிழக முதல்வர் வழக்கு தொடர்ந்து 2022-ல் நமக்கு சாதகமான ஒரு தீர்ப்பு வந்தது. அதன்மூலம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தற்போது வந்துள்ள தீர்ப்பிலும், தமிழக அரசு முதுநிலை மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல், சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

இந்தாண்டு சேர்க்கைக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆனதுதான் இந்த தீர்ப்பு. அதற்குள் சீராய்வு மனு தாக்கல் செய்து அடுத்த ஆண்டிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in