கொளத்தூரில் கல்லூரிக்கு கோயில் நிலம்: அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்

கொளத்தூரில் கல்லூரிக்கு கோயில் நிலம்: அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: கொளத்தூரில் கல்லூரி அமைக்க கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க ஏதுவாக கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலம் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படும்’ என்று கடந்த 2024 செப்டம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதை ரத்து செய்ய கோரி, மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குறைவான வாடகை நிர்ணயம்: அப்போது மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ‘‘தற்போதைய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், கோயில் நிலத்துக்கு மாதம் ரூ.5.12 லட்சம் வாடகை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ரூ.3.19 லட்சம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த கோயிலுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.1.93 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வழக்கறிஞர் என்ஆர்ஆர் அருண் நடராஜன் ஆகியோர், ‘‘கோயில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்ட 2022-ம் ஆண்டில் இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை: ஒப்பந்தப்படி, 3 மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் வாடகை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, குத்தகை தொடர்பான ஒப்பந்தம் முறையாக பதிவு செய்யப்படும்’’ என்றனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in