

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்று மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அச்சுறுத்திய இளைஞர்கள் யார் என்பதை கண்டறியவும் அவர்களை பிடிக்கவும் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் நள்ளிரவு 2 மணியளவில் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள், முட்டுக்காடு படகுகுழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்ப்பதற்காக காரை அங்கு நிறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்களின் கார்களுக்கு பின்னால், திமுக கொடி கட்டிய சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த இளைஞர்கள் பெண்களின் காரை நிறுத்தியுள்ளனர். இதனால் முதலில் அங்கிருந்து பெண்கள் சென்ற கார் கிளம்பி உள்ளது. இதையடுத்து, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளைஞர்கள் அவர்களது காரை கிளப்பியுள்ளனர்.
இதைதொடர்ந்து திமுக கொடி கட்டியிருந்த இளைஞர்களின் காரும் கிளம்பியது. அவர்கள் இளம்பெண்கள் சென்ற காரை சில கிலோ மீட்டர் தூரம் விரட்டியுள்ளனர். இதனால், அச்சத்துடன் பதற்றம் அடைந்த பெண்கள், "போலீஸாருக்கு தகவல் தெரிவியுங்கள், உறவினர்களுக்கு தகவல் சொல்லுங்கள்" என பயத்தில் கதறியுள்ளனர். மேலும், தங்களை வெகு தூரமாக அந்த இளைஞர்களின் கார் துரத்தி வருவதை செல்போனில் வீடியோவாக பதிவிட்டனர். பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் தங்களது காரை இளம்பெண்களின் காருக்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர். பின்னர், அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர் இளம்பெண்கள் வந்த காரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து காரை தட்டி மிரட்டியதாக தெரிகிறது. மேலும், காருக்குள் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மேலும் அச்சம் அடைந்த பெண்கள் தங்களது காரை சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பின் நோக்கி இயக்கியுள்ளனர். பின்னர் ஒருவழியாக கானத்தூர் பகுதியில் தங்களின் அடுக்குமாடி குடியிருப்புக்குச் வந்து சேர்ந்தனர். அதுவரை அந்த இளைஞர்களும் விரட்டி வந்து மிரட்டி சென்றுள்ளனர். இந்நிலையில், பெண்கள் எடுத்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
3 தனிப்படை அமைப்பு: பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சின்னி திலங்க் என்பவர் கானாத்தூர் போலீஸில் கடந்த 26-ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர். தலைமறைவான இளைஞர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது நிறுத்தப்பட்டிருந்த பெண்களின் கார், அங்கிருந்து புறப்படும்போது இளைஞர்களின் காரை உரசிச் சென்றதாகவும் அதற்கு நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை விரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் புகார் அளித்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.