

தவெக கட்சியின் புதிய நிர்வாகிகளின் 2-வது பட்டியலை கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தவெக கட்சி அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, புதிதாக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, சேலம், ஈரோடு உட்பட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் விஜய் வெளியிட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வாழ்த்து தெரிவித்தது வெள்ளி நாணயத்தையும் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்களின் 2-வது பட்டியலை, சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் நேற்று வெளியிட்டார். அதன்படி 2 சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாவட்டம் என க.அப்புனு (தி.நகர், ஆயிரம் விளக்கு), தாமு (சைதாப்பேட்டை, விருகம்பாக்கம்), அம்பத்தூர் ஜி.பாலமுருகன் (அம்பத்தூர், மதுரவாயல்), இசிஆர். சரவணன் (சோழிங்கநல்லூர், ஆலந்தூர்) ஆகியோர் சென்னை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, குட்டிகோபி (மயிலாடுதுறை), பிரகாஷ் (கள்ளக்குறிச்சி), மாதவன் (கன்னியாகுமரி கிழக்கு), சபீன் (கன்னியாகுமரி மேற்கு), சுகுமார் (நாகப்பட்டினம்), தர்மா (திண்டுக்கல்), சிவா (தருமபுரி), பர்வேஷ் (புதுக்கோட்டை) உள்ளிட்ட 19 புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகளை சந்தித்த அவர், ‘‘உங்களை நம்பித்தான் கட்சியை ஆரம்பித்துள்ளேன். இத்தனை ஆண்டுகாலம் மன்ற பணிகளில் என்னோடு இருந்த நீங்கள், அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 தேர்தல் நம் இலக்கு. அதற்காக முனைப்போடு செயல்பட்டு கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்’’ என்று அறிவுறுத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.